“ஹரிஜன” இயக்க ரகசியம். குடி அரசு - செய்தி விளக்கம் - 17.09.1933 

Rate this item
(0 votes)

ஆக்ராவில் கூடிய “ஹரிஜன ” (தீண்டப்படாதார்) மகாநாட்டில் "ஹரிஜனங்களுக்கு பொருளாதார விஷயத்திலும், கல்வி விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்பாடு செய்வதைவிட ஆலயப்பிரவேசத்தைப் பற்றியே அதிகமாக வற்புறுத்துவது ஒப்புக் கொள்ளத்தக்கதல்ல” என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தோழர் காந்தியவர்கள் "ஹரிஜனம்” பத்திரிகையில் பதில் சொல்லுகையில், 

"ஹரிஜனங்களுக்குப் பொருளாதார முன்னேற்றமும், கல்வி முன்னேற்றமும் ஜாதி இந்துக்கள் தாங்களாகவே செய்யவேண்டிய காரியமாகும். பொருளாதாரம், கல்வி ஆகிய துரைகளில் ஹரிஜனங்கள் உயர்த்தப்பட்டு விட்டால் மதத்துரையில் அவர்கள் சமத்துவமானவர்களாகி விடமாட்டார்கள். ஆதலால் ஹரிஜனங்கள் ஆலயப்பிரவேசத்தை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஜாதி இந்துக்கள் தங்களுக்கு எந்த நிபந்தனைகள் மீது கோவில்கள் திறக்கப்பட்டிருக்கின்றனவோ அதே நிபந்தனைகளின் மீது ஹரிஜனங்களுக்கு கோவில்களை திறந்துவிடவேண்டும்” என்பதாக எழுதியிருக்கிறார். 

இதிலிருந்து ஹரிஜன வேலையின் இரகசியம் என்ன என்பதைப்பற்றி நாம் இதற்கு முன் எழுதிவந்த விஷயம் உண்மை என்பது நன்றாய் விங்கும். “ஹரி” ஜனங்களுக்கு வேண்டியதெல்லாம் ஜாதி இந்துக்களைப் போன்ற கல்வியும், ஆகாரமுமாகும். ஆனால் காங்கிரசும், காந்தியாரும், ஹரிஜனங் களுக்கு கொடுப்பது ஆலயப்பிரவேசமாகும். இதன் இரகசியம் ஹரி ஜனங்கள் பொருளாதாரத் துறையிலும், கல்வியிலும், முன்னேறி விட்டால் ஜாதி ஹிந்துக்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுவார்கள். அப்பொழுது வருணாச்சிரம தர்மம் அழிந்துபோக நேரிடும். ஆதலால் ஹரிஜனங்கள் பொருளாதாரக் கிளர்ச்சியும், கல்விக் கிளர்ச்சியும் செய்வதற் கில்லாமல் செய்வதற்கு அவர்களை கோவிலுக்குள் கொண்டுபோய்த் தள்ளிவிட்டால் கடவுள்மீது பக்தி ஏற்பட்டு தங்கள் கையிலுள்ள காசையும் சாமிக்கு அழுது விட்டு தங்களுக்கு கல்வியும், பணமும் வேண்டுமென்று கடவுளையே கேட்டுக்கொண்டு பழயபடியே மூடர்களாக இருக்கச் செய்துவிடலாம் என்கின்ற தந்திரமே ஒழிய வேறில்லை. 

ஆதலால் ஹரிஜனங்களுக்கு "ஆலயப்பிரவேசம். ஆலயப் பிரவேசம் " என்று சத்தம் போடுவதெல்லாம் அவர்களது பொருளாதார முயற்சிக்கும். கல்வி முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடுவதாகுமே தவிர வேறொன்றும் அல்ல என்பதே நமது அபிப்பிராயம். இதை ஹரிஜனங்கள் என்பவர்களும் நன்றாய் தெரிந்துகொண்டதற்கு நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகின்றோம். ஆனால் காங்கிரசினிடமிருந்து பணம் பெற்று வயிறு வளர்க்கும் ஹரிஜனங்களும் காங்கிரசின் பிச்சையினால் லஞ்சத்தினால் அல்லாமல் வேறுவழியில் வயிறு வளர்க்கவோ, விளம்பரம் பெறவோ, யோக்கியதை இல்லாத ஹரிஜனங்களும் தங்கள் சமூகத்தை துரோகம் செய்து காங்கிரசின் சூழ்ச்சிக்கு இடம்கொடுத்து வருவதில் நமக்கு ஆச்சரியமில்லை. எந்தக் கூட்டத்திலும் எந்த இயக்கத்திலும் இப்படிப்பட்ட நபர்கள் 100-க்கு ஒன்று இரண்டு இருந்துகொண்டுதான்வரும். ஆதலால் "ஹரி”ஜன சமூகத் திலும் இப்படிப்பட்டவர்கள் இருப்பது இயற்கையேயாகும். எனவே சம தர்மக் கொள்கையில் நம்பிக்கையோ, அனுதாபமோ உள்ளவர்கள் இந்த ஆலயப்பிரவேசத்தின் தந்திரத்தை உணர்ந்து பொருளாதார சமத்துவத் திற்கே உழைத்து வருவார்களாக? 

குடி அரசு - செய்தி விளக்கம் - 17.09.1933

Read 48 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.